பனித்துளிகள் புதிய தளத்தில்

தாங்கள் இதுவரை அளித்துவந்த ஆதரவுக்கு நன்றி!

தங்கள் ஆசியுடன், பனித்துளிகள் புதிய தனித்தளமாக உருவெடுத்துவிட்டது.

அங்கு என் கவிதைகளைத் தொடர இருக்கிறேன்.

கவிதைகள் மற்றுமன்றி பல்வேறு கருத்துக்கள் வேறு ஆசிரியர்களாலும்

உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வருக. நல்லாதரவினைத் தொடர்ந்து தருக….!

முகவரி: http://www.panithuligal.com

கவிதைப் பக்கம்: http://www.panithuligal.com/poems.html

அன்புடன்

பொன்னு. கணேஷ் குமார்.

உமிழ்ந்து கெடுத்தோம்!

உமிழ்ந்து கெடுத்தோம்

என்னை முந்திக்கொண்டுபோனார் ஒரு மனிதர்
விண்ணை எட்டியது அந்த இருசக்கரவாகனப் புகை
முந்தியதும் எனக்கு நேர் முன்னால் காறிஉமிழ்ந்தார்

வந்ததே கோபம் எனக்கு, முயன்று முந்தினேன்
வண்டியை நிறுத்திக் கேட்டேன் “அய்யா நலமா?”
சண்டிக்குதிரை வண்டி மெதுவாக நின்றது.

வியப்பில் ஆழ்ந்தார் மனிதர் – குரலில்
தயக்கம் தோயக் கேள்வி எழுப்பினார்

“கண்டதில்லையே உம்மை…
எப்படி அறிந்தீர் என்னை?”

“இப்போதுதான் அறிந்தேன்…
நீங்கள் துப்பிய எச்சில் என் சட்டைப்பைக்குள் விழுகையில்”

சொல்லிமுடித்தேன்; அவர் முகமும் சுருங்கிற்று!
தொடர்ந்து சொன்னேன்,

“உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய உமக்கு விருப்பம்
எனது வாழ்வும் எனக்கு விருப்பம்… ஆனால்,
மனிதரை மனிதர் மதிப்பதுதான் – இந்த
மண்ணுக்கழகு…

உம்மைப் போலே பலகோடி பேரும்
உலகில் உண்டென்று காணீர்!
உமிழ்வது உங்களின் உரிமை…
ஆனால் ஊரார்மேல் அல்ல!

சாலையில் உமிழ்வது சாலவும் நன்றென்று
காலையில் யாரேனும் சொல்லிக் கொடுத்தனரா?

உமிழ்நீர் இழந்தால் உம் உடல்நிலை சீர்கெடும்
உமிழ உமிழ, உயர்வான இந்த ஊர்கெடும்”

உருட்டி உருட்டி விழித்தார் மனிதர்
கைகளைப் பிசைந்து பல்லைக் கடித்தார்

“சங்கடப்படுத்துதல் என் நோக்கமல்ல அய்யா!
தங்களைத் திருத்துதல் என் நோக்கம்!”
மீண்டும் தொடர்ந்தேன்…

“துப்பாதீர் இனிச் சாலைகளில்
அது அடுத்தவரைப் பாதிக்கும்
கடவுள் வாழ்வை மகிழ்ந்து கொடுத்தார்
அதைநாம் தினமும் உமிழ்ந்து கெடுத்தோம்

மீண்டும் ஒன்று சொல்லட்டுமா?…”
நிறுத்திப் பின் தொடங்கினேன்…

“உங்கள் வாகனம் பழுதாகியிருக்கிறது…
அதன் புகை பழுப்பாகியிருக்கிறது!
அதுவும் பொதுநலனுக்குச்செய்யும் கொடுமை
நாட்டைக்காப்பது நம் கடமை
நல்லமுறையில் பழுதுபார்த்து
நாளும் வைத்திருந்தால் தெரியும் அதன் அருமை”

விக்கிப்போய் நின்றார்.
கோபமும் அவமானமும் அவரின் முகத்தில் தெரித்தன

அதன்பிறகு நான் அவ்விடத்திலில்லை
அவர் என்னவானார் என்றும் நான் அறியவில்லை

நண்பர்களை மறக்காதீர்!

அன்பார்ந்த நட்பே!
இப்படி நம்மால் மனதார அழைக்க முடிகிறதென்று நினைக்கிறீரா?

அயல் நாடு போனவரும் சரி,
அடுத்த ஊர் போனவரும் சரி,
ஒரு நாள் உயிரான நட்பை
உணர்வோடு கலந்தவராய்த் தோன்றியவரும் சரி
உண்மையாய் நட்பை நினைப்பார் யாருமில்லை!

இரவில் துணையாய் நிலவுவருவதைப் போல
ஒட்டுமொத்த அன்பால் நம்முடன் கூட்டாய் இருந்தவர் கூட
சிட்டுக்குருவியாய் பறந்து போய் செல்வத்தை சேகரிப்பார்!
கூட்டுப் படிப்பை கல்லூரி நாட்களை
நினைப்பதற்கு நேரமில்லை!
கற்றதும் கல்வி மறப்பார்! அவர்மேலும் தவறு இல்லை
கடலுக்கு அப்பால் சென்று பெற்றோரை உற்றாரை மறப்பார்
அதுவும் அவர் தவறில்லை!
எல்லாம் காலத்தின் கட்டாயம்…

மலைக்கோவில் படிக்கட்டுகளில் நாம் ஏறிச்செல்கையில்
இறைவனை நாம் நெருங்குகிறோம்…
இறங்கி வருகையில் இறைவனை விட்டு விலகி வருகிறோம்…
இறையருளை நெருங்கிச்செல்ல படிக்கட்டு ஏறுவது சிரமமாகத்தான் இருக்கிறது.
விட்டு விலகி வர படிகளில் இறங்குவது சுலபமாக இருக்கிறது…

நம்மை விட்டு விலக நண்பர்களும் நினைப்பதில்லை!
நாமும் நினைப்பதில்லை!
ஆனால் விலகிச் செல்வது இயல்பாக நடந்தே தீருகிறது…

மானிடர்களைத் தவிர்த்து நாம்,
மானிட்டர்களைப் பார்த்துப்பார்த்தே பழகிபோய்விட்டோம்…

தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்டன
தொடர்புகள் நியாயப்படி அதிகரித்திருக்கவேண்டும்
தொலைபேசிகள் போய் இணையபேசிகள் வந்துவிட்டன
மின்னஞ்சல்கள் இல்லாமல் உணவு இடைவேளைகூட இல்லை
குறுந்தகவல்கள் கூட இலவசமாய் கிடைப்பதாகக் கேள்வி

என்ன இருந்து என்ன பயன் மின்னஞ்சல் முகவரிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன!
தொலைபேசி, கைத்தொலை பேசி எண்களும் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன
நம்மில் பலருக்கு மாற்றம் மலர்ச்சியைத் தருகிறது!
அதுதானே என்றும் வளர்ச்சியைத் தருகிறது!

பழைய சோறும் பச்சை மிளகாயும் பார்த்தே பலநாட்கள் ஆகிவிட்டன…
பழைய லேம்பிரட்டா ஸ்கூட்டர் கூட புகைப்படத்தில் மின்னுகிறது!
அதுசரி…
ஸ்கோடா வாங்கியபின் பழசையெல்லாம் போடா என்று
ஒதுக்குவது நியாயம்தானே…

பயன்பாட்டுப்பொருட்களுக்கு இது பொருந்தும்!
ஆனால் மனித மனங்களுக்கு இது பொருந்துமா?
கொஞ்சம் மின்னஞ்சல் அனுப்பினால் என்ன!
ஒருவரியானாலும் அவருக்கென்று எழுதினால் என்ன?

சிந்தனை செய்வோம் பழைய நண்பர்களை வந்தனை செய்வோம்!

சொல்வீரனல்ல செயல்வீரன்

திரு மகாராஜ் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கவிதையை நான் தமிழில் மொழிபெயர்த்திருந்தேன் (இங்கே காண்க). பின்னர் அதிக ஆர்வம் அவரிடம் காணப்படுகிறது. உடனே மென்பொருள் ஆராய்ச்சியை விட்டு தமிழ்க்கவிஞராகவே ஆகிவிட்டார். செயிண்ட் லூயிஸில் ஒரு தமிழ்க் கவிஞர் வாழ்கிறார் என்பது நமக்கெல்லாம் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த கவிதை அவரே தமிழில் எழுதி அனுப்பிவிட்டார். செயல்வீரன் என்று ஒப்புக்கொள்ளச் செய்துவிட்டார்.

அழகான கவிதைவரிகள் உண்மையை எதார்த்தமாய் எடுத்துரைக்கிறது! அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் கவிதையை இங்கு பதிவிடுகிறேன்.

என்னால் எதுவும் முடியும் என்று நீ மார்தட்டினால்
உலகம் உன்னை ஒரு முறையேனும் திரும்பிப்பார்க்கும்

வாய்ச்சொல்லால் மட்டும் உயர்ந்திடல் இயலாது நண்பா
உன் செய்கையால் மட்டுமே நீ உயர்வது திண்ணம்

ஆணவம் என்னும் ஆடையை நீ களைந்துவிடு
அடக்கம் என்னும் நிலையைநீ அடைந்துவிடு
அதுவே நிலையென்று நீ உணர்ந்துவிடு

உயரிய குறிக்கோளை உன் உணர்வுகளோடு கரைத்துவிடு
கவனம் சிதறாமல் அதனை நோக்கி நீ வீர நடையிடு

வெற்றியின் வழிப்பாதையில் நீ சந்திக்கும் இன்னல்களால் கலங்காதே
வெற்றி பெற்றேதீருவேன் என்று நெஞ்சுரமுடன் கடந்துசெல்

நிலையான வெற்றியினை நீ அடைந்திடுவாய்
உயர் பெரியார் போற்ற நீ வாழ்ந்திடுவாய்

என்னால் எதுவும் முடியுமென்று
இனியும் நீ சொல்லால் செய்வதில் ஒன்றுமில்லை
இந்த உலகம் உன்னை அறியும்
நீ சொல்வீரனல்ல செயல்வீரன்! செயலால் சொல்!

என்னருமைப் பரம்பொருளே!

இக்கவிதை அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் நகரத்திலிருந்து அன்பர் திரு. மஹாராஜ் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்பியிருந்தார். அதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

ஆங்கிலக்கவிதை:

In the farthest distance i see a light, a Divine light
Oh Divinity! pardon my ignorance ,
Guide me to the path of wisdom
Illuminate the light within me to lead a simple and humble life
Bless me ..
To seek the eternity and strive for higher purpose
To help the needy and to share my wisdom
To attain the supreme state of eternity

பரம்பொருள்

தூரத்திலோர் ஒளியைக்காண்கிறேன்! தெய்வீக ஒளியாக
பரம்பொருளின் பிம்பம் என் விழியில் விழக்காண்கிறேன்

எங்கிருந்தேன் எனும் நிலை எனக்கில்லை மன்னிப்பாய்
இங்கிருந்தே உனை வணங்கி உயிருருகக் கேட்டிடுவேன்

அறியாமை நீக்கியென் அறிவை மீட்டுத்தா – இருள்
உறையாமை ஆக்கி என் மனவிளக்குப் போட்டுத்தா!
நிலையாமை போக்கி நிலைபெற்று நான் வாழ்ந்திடவே

இல்லாமை எனும் நிலையகற்றி எப்போதும் – குறை
சொல்லாமை ஆக்கிடவா என்னருமைப் பரம்பொருளே

என்னறிவை உலகுக்குப் படைத்திடவே
எனக்கறிவைக் கொடுத்திடுவாய் பரம்பொருளே!

என் வாழ்க்கை எப்போதும் சிறந்திடவே
எப்போதும் அழியாத புகழ் வேண்டும் பரம்பொருளே!

-நன்றி திரு. மஹாராஜ்

யார் முட்டாள்?

பெங்களூரு

“ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெங்களூரில் நேற்று 31/03/2008)கன்னட அமைப்பினர் ரகளையில் ஈடுபட்டனர். தமிழ் சினிமா தியேட்டர்கள் தாக்கப்பட்டன. தமிழக பஸ்கள் சிறை பிடிக்கப்பட்டன. தமிழகத்துக்கு தண்ணீர் தரமாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.”

-தினத்தந்தி 1/4/2008.

நீரும் நெருப்பும் வானும் காற்றும் பொதுவிலிருக்குது…
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது!
பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனிதர் இதயமே – இங்கு
பிரிவு நீங்கி ஒன்றாய்ச் சேர்ந்தால் அமைதி நிலவுமே…
நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற – இந்த
நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற…

சீர்காழி கோவிந்தராஜனின் சிம்மக்குரலில்
சிறப்பாய் ஒலிக்கிறது என்றும் மனதில்
ஒற்றுமைக்குக் கவிஞர் எழுதிய பாட்டு
இதற்கு வைத்தனரே இவர்கள் வேட்டு!

வீதியில் போகிற வழிப்போக்கன்
வீட்டுக்கு வந்து நீர் கேட்டால்
இவர்கள் தரமாட்டேன் என்று
சொல்கிற தரித்திரம் பாரீர் – பல
உண்மைகள் நிறைந்த சரித்திரம் கேளீர்

ஊரெங்கும் தண்ணீர் நிறைந்து
பூங்காக்கள் புத்தாடை அணியும் ஊர் எது?
தெப்பக்குளங்கள் எல்லம் சுத்தமாய்
ஓடும் நீர்வந்து நிரப்பி சிறக்கும் ஊர் எது?
அணைகள் பல கட்டி ஓடும் நீரை
மனைகள் தோறும் செலுத்தும் ஊர் எது?
செல்வம் கொழிக்கும் நகரங்கள் பல
சிறந்து நிற்கும் தேசமெது…?

தருமபுரியா…?
ஓசூரா….?
சேலமா…?
இல்லை வரண்டுபோன வேலூரா…?

இந்தியாவைக் கூறு போட இவர்கள்
வரிந்து கட்டி வந்துவிட்டனரா…?

இல்லை இல்லை இது ஒரு மாயை…
இவர்கள் சிறந்தாய் வந்த அரசியல் அம்புகள்!
மக்களை முட்டாளாக்கும் முயற்சியில்
முட்டாள் தினத்துக்கு முன் தினமே முடிவெடுத்தவர்கள்

ஒரு இந்தியனுக்கு குடிக்க நீர்தர மறுக்கும் இவர்கள்
பல கோடி அமெரிக்க ஐரோப்பியர்களை
பெங்களூரில் மென்பொருள் சாலைகளில் தங்கவைத்து
அவ்வூர்களுக்காக 24 மணிநேரமும்
தொலைபேசியில் தன் மக்களைப் பேசவைத்து
அவர்களின் தொண்டைத்தண்ணீர் வற்றிப்போகாமல் இருக்க
தமிழ்நாட்டுக்கு தராமல் பிடுங்கிவைத்த நீரை
அள்ளி அள்ளித் தர அழகாய் போட்டுவைத்த திட்டம் அது!

எவனோ சொன்னதாக ஞாபகம்,
“எனக்கு இரண்டு கண்கள் பழுதானால் பரவாயில்லை
அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது பாழாய்ப் போகட்டும்”
இவர்களுக்கும் இது பொருந்துது பார் ஞானத்தங்கமே…!

சுயநலக்காரனென்று ஏசாதே!

Selfish
உனக்கு யாரும் உதவவில்லை என்று
மனக்குமுறல் கொள்பவனே

உலகத்தின் நடப்புகளைப் பற்றித்தெரிந்துகொள்
அடுத்தவனுக்கு உதவ எண்ணும்
உதவி பண்ணும் 99 விழுக்காட்டினர்
யாருக்கு உதவிசெய்கிறார்களோ
அவர்களாலேயே
அவமானப்படுத்தப் படுகிறார்கள்

உன் உள்மனத்தைக் கேட்டுப்பார்
உனக்கு உதவி செய்தவர்களை
எப்படியெல்லாம்
அவமானப்படுத்தினாய் என்று
அது சொல்லும்!

நமக்கு சுயநலம் பெருகுவதன்
மூலகாரணமே இதுதான்!
எனவே இனிமேலாவது
சுயநலக்காரனென்று ஏசாதே!
அப்படி அவரை ஆக்கியது
நம் செயலென்று யோசி!

என்ன பாவம் செய்தான் உன்னைத் தொடர?

காலமெல்லாம் அழியாத சின்னங்களாக
இன்றும் சாலைகளில் வலம் வரும்
பழைய வாகனங்கள் எப்போது விடுவிக்கப்படும்?

புதிய தொழில்நுட்பங்கள் பல வந்து
புகையின்றி பயணிக்கக் கற்றுத்தந்தும்
ஏனிந்த பராமரிக்கப் படாத பழையன…

இரண்டுநாள் மீந்தது என்றுமே
உணவாயினும் நஞ்சுதான்

கரும்புகைப் போர்வையில்
உலகத்தைப் போர்த்திவிட
புதிய பிரமாணமா…

இரண்டுமாதம் ஒருமுறை
வாகனங்கள் பராமரிப்பு சாலையில்
புத்துணர்வு ஊட்டப்பட வேண்டும் நண்பா..

உன் பின்னால் வருபவரின்
உணர்வுகளைப் புரிந்துகொள்
உன்வாகனப் புகையைச் சுவாசித்து
உயிர் விட்டுக்கொண்டிருக்கிறான் தெரியுமா….

புரிகிறது!
“சட்டமிருக்கிறதா?” என்றுதானே கேட்கிறாய்?
பாழாய்ப்போன அரசாங்கமும்
கேடுகெட்ட சட்டங்களும்
உன் போன்றவருக்கு அளிக்கும் பாதுகாப்பை
உணர்வுள்ள தனிமனிதனுக்கு அளிப்பதில்லை
அதனால் பயனுமில்லை!

இதனை அறிந்தும் நாமும் சளைக்காமல்
ஓட்டுபோட்டு ஓட்டுப்போட்டு
நம் உரிமைத்துணியில்
ஓட்டை போட்டுக்கொண்டிருக்கிறோம்!

புலம்பல் எனது வாடிக்கை – பாகம் 1

சட்டம் கடுமையாக்கினால்
மனித உரிமைமீறல்
என்பவர்கள் கவனத்திற்கு…

வரைமுறை இருந்தே நாம்
பலமுறை மீறுகிறோம்

கொலை செய்தவனுக்குத்
தூக்குதண்டனை மனித உரிமை மீறல் என்றால்,
அவன் கொலை செய்தது
மனித உரிமை மீறலில்லையா…?

பெண்ணைக் களங்கப்படுத்தியவனுக்கு
தண்டனை இல்லையென்றால்
அது அவனுக்கு அனுமதிச்சீட்டல்லவா?

சாலைவிதிகள் மதிக்காத உனக்கு
அபராதம் தவறென்றால்
இன்னொருவன் மீறிப்போவது கண்டு
நீ பொருமுவதும் தவறுதான்

கடுமையான தண்டனைகள்
சிக்கலில்லாத சட்டங்கள்
நாட்டின் பாதுகாப்புக்கு அடித்தளங்கள்

முதலில் நம்நாட்டை
நம்மிடமிருந்து பாதுகாப்போம்
பிறகு எதிரி பற்றி யோசிப்போம்

ஊழல் செய்தவன் சொத்தைப் பிடுங்கி
நாட்டின் நலநிதியில் சேர்க்கட்டும் அரசாங்கம்
செய்வானா அவன்

வக்கீல் மட்டும் வாதாட வேண்டுமா
அனுமதி கொடுத்துப்பார் யாரும் வழக்குரைக்க

பலவழக்குகள் தீரும்
வக்கீல் கூலி தர முடியாதவந்தான்
வழக்குகளைத் திரும்பப் பெறுகிறான்

வருக பொங்கலே!

பொங்கல்

வந்தாயா? வா….!

வருடமொருமுறை வந்து
எங்களுக்கெல்லாம்
நீதான் தமிழனை நினைவூட்டுகிறாய்!

ஏர் பூட்டி சோறுபோட்ட
தமிழன் இன்று மென்பொருள்
செய்யப்போய் விட்டான்

அவனுக்கு அதிலேயும்
திறமை அதிகம்

பழைய சோற்றுக்குப்
பதமாய் மிளகாய் கடித்த
என் தமிழன்
இன்று பிஸ்ஸா வாங்கித்தின்றுவிட்டு
பைசா சம்பாரிக்கிறான்

பெற்ற தாயை மறந்தான்
உற்றாருறவினர் மறந்தான் – உடன்
கற்றார், தோழர் மறந்தான்

காசு வாங்கி கட்டிய மனைவி
ஆசையோடு பெற்ற குழந்தை
மீசையோடு நடந்த மிடுக்கு
எல்லாம் வீசியெறிந்தே பறந்தான்

பழையன கழிதல்,
புதியன புகுதல்
இப்போதைக்கு இதுதான் அவன் மந்திரம்
அதற்குத்தான் போகி என்பதை முற்றிலும் மறந்தான்

உழைத்த உழைப்பில்
பெற்ற உயர்வைப்
பெருமிதமாக எண்ணி
பொங்கலிட்ட பானை மறந்தான்

அறிவு சிறக்க
ஆயிரம் கருத்தை
அழகாய்ச் சொன்ன
வள்ளுவன் திருநாள்
அன்றே மறந்தான்

அனுபவம் கூறி
ஆயுள் அளித்த
பெரியோரை வணங்கும்
பெரிய பொங்கல்
முற்றிலும் மறந்தான்

பொங்கல் திருநாளே!
இந்திய நிறுவனப்
பணியில் இருந்தவரை
‘விடுமுறை’ என்றாவது
உன்னை நினைத்தான்

பன்னாட்டு நிறுவனப்
பணிக்குச் சென்றதும்
கரும்பில் பிழிந்த
சர்க்கரைகூட வேண்டாமென்று
சுகர்ஃப்ரீ வாழ்க்கை
வாழும் தமிழனை
அவன் மறந்தாலும்
நீ மறக்காத
மாண்பை எண்ணி

மனசில் கொஞ்சம் மழையடிக்கிறது! -ஆனால்
நினைவில் மட்டும் வெயிலடிக்கிறது!

நீ வந்து போ!
உன் பெயர் சொல்லி
ஒருவார விடுமுறை
நீ தந்து போ!

மறந்தவனை நினைக்காதே!
நினைப்பவனை மறக்காதே
நீ வந்து போ பொங்கலே!
நீ வந்து போ!