நண்பர்களை மறக்காதீர்!

அன்பார்ந்த நட்பே!
இப்படி நம்மால் மனதார அழைக்க முடிகிறதென்று நினைக்கிறீரா?

அயல் நாடு போனவரும் சரி,
அடுத்த ஊர் போனவரும் சரி,
ஒரு நாள் உயிரான நட்பை
உணர்வோடு கலந்தவராய்த் தோன்றியவரும் சரி
உண்மையாய் நட்பை நினைப்பார் யாருமில்லை!

இரவில் துணையாய் நிலவுவருவதைப் போல
ஒட்டுமொத்த அன்பால் நம்முடன் கூட்டாய் இருந்தவர் கூட
சிட்டுக்குருவியாய் பறந்து போய் செல்வத்தை சேகரிப்பார்!
கூட்டுப் படிப்பை கல்லூரி நாட்களை
நினைப்பதற்கு நேரமில்லை!
கற்றதும் கல்வி மறப்பார்! அவர்மேலும் தவறு இல்லை
கடலுக்கு அப்பால் சென்று பெற்றோரை உற்றாரை மறப்பார்
அதுவும் அவர் தவறில்லை!
எல்லாம் காலத்தின் கட்டாயம்…

மலைக்கோவில் படிக்கட்டுகளில் நாம் ஏறிச்செல்கையில்
இறைவனை நாம் நெருங்குகிறோம்…
இறங்கி வருகையில் இறைவனை விட்டு விலகி வருகிறோம்…
இறையருளை நெருங்கிச்செல்ல படிக்கட்டு ஏறுவது சிரமமாகத்தான் இருக்கிறது.
விட்டு விலகி வர படிகளில் இறங்குவது சுலபமாக இருக்கிறது…

நம்மை விட்டு விலக நண்பர்களும் நினைப்பதில்லை!
நாமும் நினைப்பதில்லை!
ஆனால் விலகிச் செல்வது இயல்பாக நடந்தே தீருகிறது…

மானிடர்களைத் தவிர்த்து நாம்,
மானிட்டர்களைப் பார்த்துப்பார்த்தே பழகிபோய்விட்டோம்…

தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்டன
தொடர்புகள் நியாயப்படி அதிகரித்திருக்கவேண்டும்
தொலைபேசிகள் போய் இணையபேசிகள் வந்துவிட்டன
மின்னஞ்சல்கள் இல்லாமல் உணவு இடைவேளைகூட இல்லை
குறுந்தகவல்கள் கூட இலவசமாய் கிடைப்பதாகக் கேள்வி

என்ன இருந்து என்ன பயன் மின்னஞ்சல் முகவரிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன!
தொலைபேசி, கைத்தொலை பேசி எண்களும் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன
நம்மில் பலருக்கு மாற்றம் மலர்ச்சியைத் தருகிறது!
அதுதானே என்றும் வளர்ச்சியைத் தருகிறது!

பழைய சோறும் பச்சை மிளகாயும் பார்த்தே பலநாட்கள் ஆகிவிட்டன…
பழைய லேம்பிரட்டா ஸ்கூட்டர் கூட புகைப்படத்தில் மின்னுகிறது!
அதுசரி…
ஸ்கோடா வாங்கியபின் பழசையெல்லாம் போடா என்று
ஒதுக்குவது நியாயம்தானே…

பயன்பாட்டுப்பொருட்களுக்கு இது பொருந்தும்!
ஆனால் மனித மனங்களுக்கு இது பொருந்துமா?
கொஞ்சம் மின்னஞ்சல் அனுப்பினால் என்ன!
ஒருவரியானாலும் அவருக்கென்று எழுதினால் என்ன?

சிந்தனை செய்வோம் பழைய நண்பர்களை வந்தனை செய்வோம்!

Advertisements