உமிழ்ந்து கெடுத்தோம்!

உமிழ்ந்து கெடுத்தோம்

என்னை முந்திக்கொண்டுபோனார் ஒரு மனிதர்
விண்ணை எட்டியது அந்த இருசக்கரவாகனப் புகை
முந்தியதும் எனக்கு நேர் முன்னால் காறிஉமிழ்ந்தார்

வந்ததே கோபம் எனக்கு, முயன்று முந்தினேன்
வண்டியை நிறுத்திக் கேட்டேன் “அய்யா நலமா?”
சண்டிக்குதிரை வண்டி மெதுவாக நின்றது.

வியப்பில் ஆழ்ந்தார் மனிதர் – குரலில்
தயக்கம் தோயக் கேள்வி எழுப்பினார்

“கண்டதில்லையே உம்மை…
எப்படி அறிந்தீர் என்னை?”

“இப்போதுதான் அறிந்தேன்…
நீங்கள் துப்பிய எச்சில் என் சட்டைப்பைக்குள் விழுகையில்”

சொல்லிமுடித்தேன்; அவர் முகமும் சுருங்கிற்று!
தொடர்ந்து சொன்னேன்,

“உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய உமக்கு விருப்பம்
எனது வாழ்வும் எனக்கு விருப்பம்… ஆனால்,
மனிதரை மனிதர் மதிப்பதுதான் – இந்த
மண்ணுக்கழகு…

உம்மைப் போலே பலகோடி பேரும்
உலகில் உண்டென்று காணீர்!
உமிழ்வது உங்களின் உரிமை…
ஆனால் ஊரார்மேல் அல்ல!

சாலையில் உமிழ்வது சாலவும் நன்றென்று
காலையில் யாரேனும் சொல்லிக் கொடுத்தனரா?

உமிழ்நீர் இழந்தால் உம் உடல்நிலை சீர்கெடும்
உமிழ உமிழ, உயர்வான இந்த ஊர்கெடும்”

உருட்டி உருட்டி விழித்தார் மனிதர்
கைகளைப் பிசைந்து பல்லைக் கடித்தார்

“சங்கடப்படுத்துதல் என் நோக்கமல்ல அய்யா!
தங்களைத் திருத்துதல் என் நோக்கம்!”
மீண்டும் தொடர்ந்தேன்…

“துப்பாதீர் இனிச் சாலைகளில்
அது அடுத்தவரைப் பாதிக்கும்
கடவுள் வாழ்வை மகிழ்ந்து கொடுத்தார்
அதைநாம் தினமும் உமிழ்ந்து கெடுத்தோம்

மீண்டும் ஒன்று சொல்லட்டுமா?…”
நிறுத்திப் பின் தொடங்கினேன்…

“உங்கள் வாகனம் பழுதாகியிருக்கிறது…
அதன் புகை பழுப்பாகியிருக்கிறது!
அதுவும் பொதுநலனுக்குச்செய்யும் கொடுமை
நாட்டைக்காப்பது நம் கடமை
நல்லமுறையில் பழுதுபார்த்து
நாளும் வைத்திருந்தால் தெரியும் அதன் அருமை”

விக்கிப்போய் நின்றார்.
கோபமும் அவமானமும் அவரின் முகத்தில் தெரித்தன

அதன்பிறகு நான் அவ்விடத்திலில்லை
அவர் என்னவானார் என்றும் நான் அறியவில்லை

Advertisements