உமிழ்ந்து கெடுத்தோம்!

உமிழ்ந்து கெடுத்தோம்

என்னை முந்திக்கொண்டுபோனார் ஒரு மனிதர்
விண்ணை எட்டியது அந்த இருசக்கரவாகனப் புகை
முந்தியதும் எனக்கு நேர் முன்னால் காறிஉமிழ்ந்தார்

வந்ததே கோபம் எனக்கு, முயன்று முந்தினேன்
வண்டியை நிறுத்திக் கேட்டேன் “அய்யா நலமா?”
சண்டிக்குதிரை வண்டி மெதுவாக நின்றது.

வியப்பில் ஆழ்ந்தார் மனிதர் – குரலில்
தயக்கம் தோயக் கேள்வி எழுப்பினார்

“கண்டதில்லையே உம்மை…
எப்படி அறிந்தீர் என்னை?”

“இப்போதுதான் அறிந்தேன்…
நீங்கள் துப்பிய எச்சில் என் சட்டைப்பைக்குள் விழுகையில்”

சொல்லிமுடித்தேன்; அவர் முகமும் சுருங்கிற்று!
தொடர்ந்து சொன்னேன்,

“உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய உமக்கு விருப்பம்
எனது வாழ்வும் எனக்கு விருப்பம்… ஆனால்,
மனிதரை மனிதர் மதிப்பதுதான் – இந்த
மண்ணுக்கழகு…

உம்மைப் போலே பலகோடி பேரும்
உலகில் உண்டென்று காணீர்!
உமிழ்வது உங்களின் உரிமை…
ஆனால் ஊரார்மேல் அல்ல!

சாலையில் உமிழ்வது சாலவும் நன்றென்று
காலையில் யாரேனும் சொல்லிக் கொடுத்தனரா?

உமிழ்நீர் இழந்தால் உம் உடல்நிலை சீர்கெடும்
உமிழ உமிழ, உயர்வான இந்த ஊர்கெடும்”

உருட்டி உருட்டி விழித்தார் மனிதர்
கைகளைப் பிசைந்து பல்லைக் கடித்தார்

“சங்கடப்படுத்துதல் என் நோக்கமல்ல அய்யா!
தங்களைத் திருத்துதல் என் நோக்கம்!”
மீண்டும் தொடர்ந்தேன்…

“துப்பாதீர் இனிச் சாலைகளில்
அது அடுத்தவரைப் பாதிக்கும்
கடவுள் வாழ்வை மகிழ்ந்து கொடுத்தார்
அதைநாம் தினமும் உமிழ்ந்து கெடுத்தோம்

மீண்டும் ஒன்று சொல்லட்டுமா?…”
நிறுத்திப் பின் தொடங்கினேன்…

“உங்கள் வாகனம் பழுதாகியிருக்கிறது…
அதன் புகை பழுப்பாகியிருக்கிறது!
அதுவும் பொதுநலனுக்குச்செய்யும் கொடுமை
நாட்டைக்காப்பது நம் கடமை
நல்லமுறையில் பழுதுபார்த்து
நாளும் வைத்திருந்தால் தெரியும் அதன் அருமை”

விக்கிப்போய் நின்றார்.
கோபமும் அவமானமும் அவரின் முகத்தில் தெரித்தன

அதன்பிறகு நான் அவ்விடத்திலில்லை
அவர் என்னவானார் என்றும் நான் அறியவில்லை

Advertisements

என்ன பாவம் செய்தான் உன்னைத் தொடர?

காலமெல்லாம் அழியாத சின்னங்களாக
இன்றும் சாலைகளில் வலம் வரும்
பழைய வாகனங்கள் எப்போது விடுவிக்கப்படும்?

புதிய தொழில்நுட்பங்கள் பல வந்து
புகையின்றி பயணிக்கக் கற்றுத்தந்தும்
ஏனிந்த பராமரிக்கப் படாத பழையன…

இரண்டுநாள் மீந்தது என்றுமே
உணவாயினும் நஞ்சுதான்

கரும்புகைப் போர்வையில்
உலகத்தைப் போர்த்திவிட
புதிய பிரமாணமா…

இரண்டுமாதம் ஒருமுறை
வாகனங்கள் பராமரிப்பு சாலையில்
புத்துணர்வு ஊட்டப்பட வேண்டும் நண்பா..

உன் பின்னால் வருபவரின்
உணர்வுகளைப் புரிந்துகொள்
உன்வாகனப் புகையைச் சுவாசித்து
உயிர் விட்டுக்கொண்டிருக்கிறான் தெரியுமா….

புரிகிறது!
“சட்டமிருக்கிறதா?” என்றுதானே கேட்கிறாய்?
பாழாய்ப்போன அரசாங்கமும்
கேடுகெட்ட சட்டங்களும்
உன் போன்றவருக்கு அளிக்கும் பாதுகாப்பை
உணர்வுள்ள தனிமனிதனுக்கு அளிப்பதில்லை
அதனால் பயனுமில்லை!

இதனை அறிந்தும் நாமும் சளைக்காமல்
ஓட்டுபோட்டு ஓட்டுப்போட்டு
நம் உரிமைத்துணியில்
ஓட்டை போட்டுக்கொண்டிருக்கிறோம்!

வருக பொங்கலே!

பொங்கல்

வந்தாயா? வா….!

வருடமொருமுறை வந்து
எங்களுக்கெல்லாம்
நீதான் தமிழனை நினைவூட்டுகிறாய்!

ஏர் பூட்டி சோறுபோட்ட
தமிழன் இன்று மென்பொருள்
செய்யப்போய் விட்டான்

அவனுக்கு அதிலேயும்
திறமை அதிகம்

பழைய சோற்றுக்குப்
பதமாய் மிளகாய் கடித்த
என் தமிழன்
இன்று பிஸ்ஸா வாங்கித்தின்றுவிட்டு
பைசா சம்பாரிக்கிறான்

பெற்ற தாயை மறந்தான்
உற்றாருறவினர் மறந்தான் – உடன்
கற்றார், தோழர் மறந்தான்

காசு வாங்கி கட்டிய மனைவி
ஆசையோடு பெற்ற குழந்தை
மீசையோடு நடந்த மிடுக்கு
எல்லாம் வீசியெறிந்தே பறந்தான்

பழையன கழிதல்,
புதியன புகுதல்
இப்போதைக்கு இதுதான் அவன் மந்திரம்
அதற்குத்தான் போகி என்பதை முற்றிலும் மறந்தான்

உழைத்த உழைப்பில்
பெற்ற உயர்வைப்
பெருமிதமாக எண்ணி
பொங்கலிட்ட பானை மறந்தான்

அறிவு சிறக்க
ஆயிரம் கருத்தை
அழகாய்ச் சொன்ன
வள்ளுவன் திருநாள்
அன்றே மறந்தான்

அனுபவம் கூறி
ஆயுள் அளித்த
பெரியோரை வணங்கும்
பெரிய பொங்கல்
முற்றிலும் மறந்தான்

பொங்கல் திருநாளே!
இந்திய நிறுவனப்
பணியில் இருந்தவரை
‘விடுமுறை’ என்றாவது
உன்னை நினைத்தான்

பன்னாட்டு நிறுவனப்
பணிக்குச் சென்றதும்
கரும்பில் பிழிந்த
சர்க்கரைகூட வேண்டாமென்று
சுகர்ஃப்ரீ வாழ்க்கை
வாழும் தமிழனை
அவன் மறந்தாலும்
நீ மறக்காத
மாண்பை எண்ணி

மனசில் கொஞ்சம் மழையடிக்கிறது! -ஆனால்
நினைவில் மட்டும் வெயிலடிக்கிறது!

நீ வந்து போ!
உன் பெயர் சொல்லி
ஒருவார விடுமுறை
நீ தந்து போ!

மறந்தவனை நினைக்காதே!
நினைப்பவனை மறக்காதே
நீ வந்து போ பொங்கலே!
நீ வந்து போ!

பெண்ணே! அழுது தோற்காதே…!

crying-eyes
அழுது புலம்பித்தான்
ஒவ்வொரு காரியமும் சாதிக்கிறாய்
ஆயிரம் வருடங்கள் கடந்தாலும்
உன்னிலை மாற வாய்ப்பில்லை

உன்னைப் பாவப்பட்ட பிறப்பாய் காட்டிக்கொள்வதில்
உனக்கு அளவுகடந்த ஆர்வம்

ஆனால் உனக்குத் தெரியுமா
அது நிரந்தர வெற்றியல்ல என்பது?

பெண்கள் சாதிக்க ஆண்களா முட்டுக்கட்டை
இல்லவே இல்லை
கொஞ்சம் ஆழமாய் யோசித்துப்பார்
அனைத்து ஆண்களும் வெற்றி பெறுவதில்லை
எல்லாப் பெண்களும் தோற்றுவிடுவதுமில்லை!
பிறகெதற்கு ஆண்களின்மேல் பழி

சமூகத்துக்கு நீ எப்படித் தோன்றுகிறாயோ
அப்படியே உன் வெற்றி தோல்விகள்!

உன் அழுகையால்
சமுதாயத்தை தோற்கடித்து விட்டதாக
நீ எண்ணிக்கொண்டால்,
அதுவே உன் முழு தோல்வி

உன் திறமைக்குட்பட்டதை
அடுத்தவரிடம் பிச்சை எடுப்பதே
உன் அழுகையின் அர்த்தம்!

உன்னால் சாதிக்க முடிவதை
அடுத்தவர் சாதனையில் சாதிப்பதே
உன் அழுகையின் நோக்கம்!

உன்னை நம்பாதவன் கூட
உன் அழுகையை நம்புவான்

அவன் நம்பிக்கை உனது தோல்வி
பெண்ணே! அழுது தோற்காதே…!

உன்னை மறக்கவில்லை பாரதி!

நீ பிறந்த மண்ணில்
உன் உதிரத்தின் உரத்தில்
உதித்துவிட்ட எங்களுக்கு
உனது பிறந்த நாளில்
Continue reading

ரோஜாவைக் காதலிக்கலாம் முள்ளையுமா காதலிக்கவேண்டும்?

மேலைநாட்டத் தொழில் நுட்பத்தில் நாகரீகத்தைக் கலப்படம் செய்துவிற்கும் தந்திரத்தை தனியே எதிர்க்கிறேன் குரல் கொடுக்க வாரீரோ…

இது பழமைவாதியின் கூச்சலல்ல; ஒரு கலாச்சாரப் பற்றுடையவனின் பாய்ச்சல்! Continue reading

நான் பிறந்த நோக்கம்

நான் பிறந்த நாள் முதலா
வான் பறக்கும் எண்ணமில்லை
ஏன் பிறந்தேன் என்றெண்ணி
Continue reading