உமிழ்ந்து கெடுத்தோம்!

உமிழ்ந்து கெடுத்தோம்

என்னை முந்திக்கொண்டுபோனார் ஒரு மனிதர்
விண்ணை எட்டியது அந்த இருசக்கரவாகனப் புகை
முந்தியதும் எனக்கு நேர் முன்னால் காறிஉமிழ்ந்தார்

வந்ததே கோபம் எனக்கு, முயன்று முந்தினேன்
வண்டியை நிறுத்திக் கேட்டேன் “அய்யா நலமா?”
சண்டிக்குதிரை வண்டி மெதுவாக நின்றது.

வியப்பில் ஆழ்ந்தார் மனிதர் – குரலில்
தயக்கம் தோயக் கேள்வி எழுப்பினார்

“கண்டதில்லையே உம்மை…
எப்படி அறிந்தீர் என்னை?”

“இப்போதுதான் அறிந்தேன்…
நீங்கள் துப்பிய எச்சில் என் சட்டைப்பைக்குள் விழுகையில்”

சொல்லிமுடித்தேன்; அவர் முகமும் சுருங்கிற்று!
தொடர்ந்து சொன்னேன்,

“உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய உமக்கு விருப்பம்
எனது வாழ்வும் எனக்கு விருப்பம்… ஆனால்,
மனிதரை மனிதர் மதிப்பதுதான் – இந்த
மண்ணுக்கழகு…

உம்மைப் போலே பலகோடி பேரும்
உலகில் உண்டென்று காணீர்!
உமிழ்வது உங்களின் உரிமை…
ஆனால் ஊரார்மேல் அல்ல!

சாலையில் உமிழ்வது சாலவும் நன்றென்று
காலையில் யாரேனும் சொல்லிக் கொடுத்தனரா?

உமிழ்நீர் இழந்தால் உம் உடல்நிலை சீர்கெடும்
உமிழ உமிழ, உயர்வான இந்த ஊர்கெடும்”

உருட்டி உருட்டி விழித்தார் மனிதர்
கைகளைப் பிசைந்து பல்லைக் கடித்தார்

“சங்கடப்படுத்துதல் என் நோக்கமல்ல அய்யா!
தங்களைத் திருத்துதல் என் நோக்கம்!”
மீண்டும் தொடர்ந்தேன்…

“துப்பாதீர் இனிச் சாலைகளில்
அது அடுத்தவரைப் பாதிக்கும்
கடவுள் வாழ்வை மகிழ்ந்து கொடுத்தார்
அதைநாம் தினமும் உமிழ்ந்து கெடுத்தோம்

மீண்டும் ஒன்று சொல்லட்டுமா?…”
நிறுத்திப் பின் தொடங்கினேன்…

“உங்கள் வாகனம் பழுதாகியிருக்கிறது…
அதன் புகை பழுப்பாகியிருக்கிறது!
அதுவும் பொதுநலனுக்குச்செய்யும் கொடுமை
நாட்டைக்காப்பது நம் கடமை
நல்லமுறையில் பழுதுபார்த்து
நாளும் வைத்திருந்தால் தெரியும் அதன் அருமை”

விக்கிப்போய் நின்றார்.
கோபமும் அவமானமும் அவரின் முகத்தில் தெரித்தன

அதன்பிறகு நான் அவ்விடத்திலில்லை
அவர் என்னவானார் என்றும் நான் அறியவில்லை

Advertisements

நண்பர்களை மறக்காதீர்!

அன்பார்ந்த நட்பே!
இப்படி நம்மால் மனதார அழைக்க முடிகிறதென்று நினைக்கிறீரா?

அயல் நாடு போனவரும் சரி,
அடுத்த ஊர் போனவரும் சரி,
ஒரு நாள் உயிரான நட்பை
உணர்வோடு கலந்தவராய்த் தோன்றியவரும் சரி
உண்மையாய் நட்பை நினைப்பார் யாருமில்லை!

இரவில் துணையாய் நிலவுவருவதைப் போல
ஒட்டுமொத்த அன்பால் நம்முடன் கூட்டாய் இருந்தவர் கூட
சிட்டுக்குருவியாய் பறந்து போய் செல்வத்தை சேகரிப்பார்!
கூட்டுப் படிப்பை கல்லூரி நாட்களை
நினைப்பதற்கு நேரமில்லை!
கற்றதும் கல்வி மறப்பார்! அவர்மேலும் தவறு இல்லை
கடலுக்கு அப்பால் சென்று பெற்றோரை உற்றாரை மறப்பார்
அதுவும் அவர் தவறில்லை!
எல்லாம் காலத்தின் கட்டாயம்…

மலைக்கோவில் படிக்கட்டுகளில் நாம் ஏறிச்செல்கையில்
இறைவனை நாம் நெருங்குகிறோம்…
இறங்கி வருகையில் இறைவனை விட்டு விலகி வருகிறோம்…
இறையருளை நெருங்கிச்செல்ல படிக்கட்டு ஏறுவது சிரமமாகத்தான் இருக்கிறது.
விட்டு விலகி வர படிகளில் இறங்குவது சுலபமாக இருக்கிறது…

நம்மை விட்டு விலக நண்பர்களும் நினைப்பதில்லை!
நாமும் நினைப்பதில்லை!
ஆனால் விலகிச் செல்வது இயல்பாக நடந்தே தீருகிறது…

மானிடர்களைத் தவிர்த்து நாம்,
மானிட்டர்களைப் பார்த்துப்பார்த்தே பழகிபோய்விட்டோம்…

தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்டன
தொடர்புகள் நியாயப்படி அதிகரித்திருக்கவேண்டும்
தொலைபேசிகள் போய் இணையபேசிகள் வந்துவிட்டன
மின்னஞ்சல்கள் இல்லாமல் உணவு இடைவேளைகூட இல்லை
குறுந்தகவல்கள் கூட இலவசமாய் கிடைப்பதாகக் கேள்வி

என்ன இருந்து என்ன பயன் மின்னஞ்சல் முகவரிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன!
தொலைபேசி, கைத்தொலை பேசி எண்களும் மாறிக்கொண்டேதான் இருக்கின்றன
நம்மில் பலருக்கு மாற்றம் மலர்ச்சியைத் தருகிறது!
அதுதானே என்றும் வளர்ச்சியைத் தருகிறது!

பழைய சோறும் பச்சை மிளகாயும் பார்த்தே பலநாட்கள் ஆகிவிட்டன…
பழைய லேம்பிரட்டா ஸ்கூட்டர் கூட புகைப்படத்தில் மின்னுகிறது!
அதுசரி…
ஸ்கோடா வாங்கியபின் பழசையெல்லாம் போடா என்று
ஒதுக்குவது நியாயம்தானே…

பயன்பாட்டுப்பொருட்களுக்கு இது பொருந்தும்!
ஆனால் மனித மனங்களுக்கு இது பொருந்துமா?
கொஞ்சம் மின்னஞ்சல் அனுப்பினால் என்ன!
ஒருவரியானாலும் அவருக்கென்று எழுதினால் என்ன?

சிந்தனை செய்வோம் பழைய நண்பர்களை வந்தனை செய்வோம்!

என்ன பாவம் செய்தான் உன்னைத் தொடர?

காலமெல்லாம் அழியாத சின்னங்களாக
இன்றும் சாலைகளில் வலம் வரும்
பழைய வாகனங்கள் எப்போது விடுவிக்கப்படும்?

புதிய தொழில்நுட்பங்கள் பல வந்து
புகையின்றி பயணிக்கக் கற்றுத்தந்தும்
ஏனிந்த பராமரிக்கப் படாத பழையன…

இரண்டுநாள் மீந்தது என்றுமே
உணவாயினும் நஞ்சுதான்

கரும்புகைப் போர்வையில்
உலகத்தைப் போர்த்திவிட
புதிய பிரமாணமா…

இரண்டுமாதம் ஒருமுறை
வாகனங்கள் பராமரிப்பு சாலையில்
புத்துணர்வு ஊட்டப்பட வேண்டும் நண்பா..

உன் பின்னால் வருபவரின்
உணர்வுகளைப் புரிந்துகொள்
உன்வாகனப் புகையைச் சுவாசித்து
உயிர் விட்டுக்கொண்டிருக்கிறான் தெரியுமா….

புரிகிறது!
“சட்டமிருக்கிறதா?” என்றுதானே கேட்கிறாய்?
பாழாய்ப்போன அரசாங்கமும்
கேடுகெட்ட சட்டங்களும்
உன் போன்றவருக்கு அளிக்கும் பாதுகாப்பை
உணர்வுள்ள தனிமனிதனுக்கு அளிப்பதில்லை
அதனால் பயனுமில்லை!

இதனை அறிந்தும் நாமும் சளைக்காமல்
ஓட்டுபோட்டு ஓட்டுப்போட்டு
நம் உரிமைத்துணியில்
ஓட்டை போட்டுக்கொண்டிருக்கிறோம்!

புலம்பல் எனது வாடிக்கை – பாகம் 1

சட்டம் கடுமையாக்கினால்
மனித உரிமைமீறல்
என்பவர்கள் கவனத்திற்கு…

வரைமுறை இருந்தே நாம்
பலமுறை மீறுகிறோம்

கொலை செய்தவனுக்குத்
தூக்குதண்டனை மனித உரிமை மீறல் என்றால்,
அவன் கொலை செய்தது
மனித உரிமை மீறலில்லையா…?

பெண்ணைக் களங்கப்படுத்தியவனுக்கு
தண்டனை இல்லையென்றால்
அது அவனுக்கு அனுமதிச்சீட்டல்லவா?

சாலைவிதிகள் மதிக்காத உனக்கு
அபராதம் தவறென்றால்
இன்னொருவன் மீறிப்போவது கண்டு
நீ பொருமுவதும் தவறுதான்

கடுமையான தண்டனைகள்
சிக்கலில்லாத சட்டங்கள்
நாட்டின் பாதுகாப்புக்கு அடித்தளங்கள்

முதலில் நம்நாட்டை
நம்மிடமிருந்து பாதுகாப்போம்
பிறகு எதிரி பற்றி யோசிப்போம்

ஊழல் செய்தவன் சொத்தைப் பிடுங்கி
நாட்டின் நலநிதியில் சேர்க்கட்டும் அரசாங்கம்
செய்வானா அவன்

வக்கீல் மட்டும் வாதாட வேண்டுமா
அனுமதி கொடுத்துப்பார் யாரும் வழக்குரைக்க

பலவழக்குகள் தீரும்
வக்கீல் கூலி தர முடியாதவந்தான்
வழக்குகளைத் திரும்பப் பெறுகிறான்