வருக பொங்கலே!

பொங்கல்

வந்தாயா? வா….!

வருடமொருமுறை வந்து
எங்களுக்கெல்லாம்
நீதான் தமிழனை நினைவூட்டுகிறாய்!

ஏர் பூட்டி சோறுபோட்ட
தமிழன் இன்று மென்பொருள்
செய்யப்போய் விட்டான்

அவனுக்கு அதிலேயும்
திறமை அதிகம்

பழைய சோற்றுக்குப்
பதமாய் மிளகாய் கடித்த
என் தமிழன்
இன்று பிஸ்ஸா வாங்கித்தின்றுவிட்டு
பைசா சம்பாரிக்கிறான்

பெற்ற தாயை மறந்தான்
உற்றாருறவினர் மறந்தான் – உடன்
கற்றார், தோழர் மறந்தான்

காசு வாங்கி கட்டிய மனைவி
ஆசையோடு பெற்ற குழந்தை
மீசையோடு நடந்த மிடுக்கு
எல்லாம் வீசியெறிந்தே பறந்தான்

பழையன கழிதல்,
புதியன புகுதல்
இப்போதைக்கு இதுதான் அவன் மந்திரம்
அதற்குத்தான் போகி என்பதை முற்றிலும் மறந்தான்

உழைத்த உழைப்பில்
பெற்ற உயர்வைப்
பெருமிதமாக எண்ணி
பொங்கலிட்ட பானை மறந்தான்

அறிவு சிறக்க
ஆயிரம் கருத்தை
அழகாய்ச் சொன்ன
வள்ளுவன் திருநாள்
அன்றே மறந்தான்

அனுபவம் கூறி
ஆயுள் அளித்த
பெரியோரை வணங்கும்
பெரிய பொங்கல்
முற்றிலும் மறந்தான்

பொங்கல் திருநாளே!
இந்திய நிறுவனப்
பணியில் இருந்தவரை
‘விடுமுறை’ என்றாவது
உன்னை நினைத்தான்

பன்னாட்டு நிறுவனப்
பணிக்குச் சென்றதும்
கரும்பில் பிழிந்த
சர்க்கரைகூட வேண்டாமென்று
சுகர்ஃப்ரீ வாழ்க்கை
வாழும் தமிழனை
அவன் மறந்தாலும்
நீ மறக்காத
மாண்பை எண்ணி

மனசில் கொஞ்சம் மழையடிக்கிறது! -ஆனால்
நினைவில் மட்டும் வெயிலடிக்கிறது!

நீ வந்து போ!
உன் பெயர் சொல்லி
ஒருவார விடுமுறை
நீ தந்து போ!

மறந்தவனை நினைக்காதே!
நினைப்பவனை மறக்காதே
நீ வந்து போ பொங்கலே!
நீ வந்து போ!

Advertisements